தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை

சீரழிக்கும் சீரியல்கள்

எதோ ஒரு  கதையுடன் ஆரம்பிக்கும் இன்றைய தமிழ் சீரியல்கள் பயணித்த பாதையை விட்டு வேண்டாத கதையுடன் குடும்பத்தினை சீரழித்து வருகிறது. 

"ஏய் அவனைப் போட்டுத்தள்ளுடா…ஊய் என்று சத்தம். 

“நீங்க 
கவலை படாதீங்கம்மா அவன் கையை மட்டும் வெட்டி எடுத்து கொண்டு வந்திருக்கிறேன்.” என்றான் அடியாள்.



போட்டுத் தள்ளச் சொன்னது தன் கனத்த சரீரத்தோடு உருண்ட கண் விழிகளை மேலும் உருட்டி மிரட்டிய பெண் வில்லி



தொடர்ச்சியாய் நாலு நாள் வீட்டில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். டி.வி சீரியல்ஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

இவைகளுக்கென்றே ஒரு ஃபார்முலா இருக்கிறது போல. திடீர் திடீர் என்று பழைய ஹிந்திப் படங்களில் மின்னல் இடி என்றதும் ஒரு சவுண்ட கொடுப்பாங்களே ‘சடேர்’ என்று. அந்த சத்தம் வரும். ஐ லவ் யூ என்று சொன்னதும் சடேர்! கதாநாயகிக்கு கேன்ஸர்ன்னதும் சடேர்! புள்ளதாச்சிக்கு பப்பாளி சாப்டக்கொடுத்துட்டா என்றதும் ‘சடேர்’ ‘சடேர்’. மூணு ‘சடேர்’க்கு மேலே வந்தா அன்னிக்கு கடை மூடப் போறாங்கன்னு அர்த்தம். மீண்டும் நாளை தொடரும். 

காமெடிக்காட்சி என்றால் ‘டொய்ங்ங்ங்ங்’ நிச்சயம் உண்டு.

ஒரு பெரிய மக்கள் கூட்டமே இதை நம்பி இருக்கிறது.சினிமாவிலிருந்து ரிடையர்டு ஆகி தொப்பையோடு இருக்கும் நடிகைகளுக்கு இது முக்கியமான இடம். சன் டி.விதான் சீரியல்களில் நம்பர் ஒன் போல. தொடர்ந்து பார்த்ததின் அனுபவ அடிப்படையில் இதை சொல்கிறேன். ஒரு நாளைக்கு மட்டும் 18
க்கு அதிகமான சீரீயல்கள் ஒளிபரப்பாகிறது. அந்த சீரியல்களை தாய்க்குலங்கள் நினைவில் வைத்திருந்து கவனமாக பின்தொடர்கிறார்கள்.

ராதிகா இதிலெல்லாம் அசால்டாக சிக்ஸர் அடிக்கிறார். குடும்ப இஸ்திரிகளெல்லாம் இவரது சீரியல்களை மிஸ் செய்வதில்லை. சீரியலில் இவருக்கு புருஷனாக நடிப்பவரை சோதாவாக காண்பிப்பதில் இவரது வெற்றி அடங்கியிருக்கிறது. எல்லாப் பொறுப்புகளையும் தன் தலையில் தாங்கிக்கொண்டு கிட்டத்தட்ட ‘சீரியல் ரஜினி’ மாதிரி வாழ்க்கையில் முன்னேறி பளபளா காரில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு போகும்போது, தியேட்டரில் ரஜினி,தனுஷ்,சிம்பு படத்துக்கு விஸில் அடிக்கிற குஞ்சாமணிகளுக்கும் வீட்டில் விஸில் மட்டும் அடிக்காது பரம ரசிகைகளாக பார்க்கிறவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை.

இல்லை அந்த extreme க்குக் போய்விடுகிறார்கள். 
இதில் நடிக்கிற சில சினிமா நடிகைகள் தெலுங்கு, கன்னட (அல்லது தமிழில்) என்னென்ன மாதிரியான ‘கலைச்சேவை’ செய்தவர்கள் என்பதை பெண்டிர் குலம் அறியாது ‘ஆ’வென்று பார்த்துக்கொண்டு இருக்கும்.

சீரியல் வரும்போது டைட்டில் போடும்போதே சவுண்ட் இல்லாமல் ம்யூட்டில் வைத்து பார்க்கவும். ஒரு சீரியலில் அதில் நடிக்கிற 25 சொச்சம் பெண்கள் கேரக்டரும் ஐயோ....,ஓ...,ஆ.....,ஊ....., என்று அழுகிற, இல்லை நெஞ்சில் அடித்துக் கொண்டு புலம்புகிற காட்சிகளாக பொறுக்கி எடுத்து டைட்டிலில் சேர்த்திருந்தார்கள். இதை சத்தம் இல்லாமல் பார்த்தால்தான் புரிகிறது.

ஊரிலிருந்து பெரியம்மா வந்திருந்தார். வயது 68. அவர்கள் இருக்கும் தெருவில் யாரோ ஒரு வயதான பெண்மணி செத்துப் போய்விட்டார். அவர் செத்தது எப்போ என்று கேட்டால் வந்த பதிலைக் கவனியுங்கள்.



தென்றல் பாத்துட்டு செல்லமே பாத்துட்டு மகனுக்கு சாப்பாடு எடுத்து வச்சிருக்கா அவளும் சாப்டுட்டு கார்த்திகை பெண்கள்  ஆரம்பிச்சி கொஞ்ச நேரத்திலயே உயிர் போயிருச்சு! அப்படின்னா உயிர் போன நேரம் கிட்டத்தட்ட இரவு 10.15 மை லார்ட்.

டெத் சர்ட்டிபிகேட்டுக்கு நேரம் தேவைன்னா இது உதவியா இருக்கும். 
கார்த்திகை பெண்கள் ஆரம்பிச்சு ஒரு இதயம் நின்னு போயிருக்கு. சாகப் போறோம்னு தெரிஞ்சதும் ‘நாராயணா நாராயணா’ இல்ல ‘நமசிவாய நமசிவாய’ன்னு கத்தணும்னு சொன்னது போய் செல்லம்மாவை நினைத்துக்கொண்டே செத்துப்போகிறார்கள்.

சாதாரணமாவே அழுவார்கள்...இதுல யாராச்சும் செத்துப் போன சீன் வந்தா...கண்ணு..! ரெண்டு லட்டு தின்ன ஆசையாதான்! கிரேசி மோகன் ஒரு நாடகத்தில் ‘அதென்ன சார் நம்ம வீட்ல யாராச்சு செத்துப் போனா அதிகபட்சம் ரெண்டு நாள்ல தூக்கிடுவோம். அன்னிக்கு ஒரு சீரீயல்ல கண்றாவி…! பொணத்த ஒரு வாரம் வச்சு வச்சு அழறாங்க’ என்பார்.

அப்போதைய காலத்தில் ‘ஜூனூன்’ என்ற சீரியல் வரும். ‘பிடிவாதம்’ தமிழில். அதில் ஒரு பெண் கேரக்டர் பெயர் ‘மினி கல்ஸி’. கேசவ் கல்ஸியின் ஒய்ஃபு. இந்தப் பெண் கர்ப்பமாக இருந்ததாக காட்டினார்கள் முதலில்....கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடின சீரியலில் 13 மாதங்களாக அவர் கர்ப்பமாக இருக்க இந்தியாவே பார்த்து வியந்தது. ஆனாலும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை.

பரிசோதனை முயற்சியாக இந்த இரண்டை முயற்சி செய்யவும்.

1.  முழு நாளும் சவுண்டு இல்லாமல் எல்லா சீரியல்களைப் பார்க்கவும். செய்து பார்த்தேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

2.  அடுத்தமுறை சீரியல் பார்க்காமல் சீரியல் பார்க்கிறவர்களை கவனித்துப் பார்ப்பது இன்னும் சுவாரஸ்யம்.
 

இப்படி இவர்களது ‘பண்பாட்டு’ கதைகளைச் சொல்லிக்கொண்டே போனால் ஒருநாள் போதாது. பெரும்பாலான டி.வி. சீரியல்களில் தாய்மை சிதைக்கப்படுகிறது. காதல் கொச்சைப்படுத்தப்படுகிறது. நட்பு கேவலப்படுத்தப்படுகிறது. இல்லற வாழ்க்கை அசிங்கப்படுத்தப்படுகிறது.

ஒரு பெண்ணை நார்மலாக காட்ட இவர்கள் அத்தனை பேரையும் அழைத்து சிறப்பு வகுப்பு எடுத்தால் நல்லதோ என்று தோன்றுகிறது. ஒன்று அவளை வீர வில்லியாக காட்டுகிறார்கள். அதாவது மாமியாரை கணவனைப் பழி வாங்கவேண்டும். அதற்கு அவள் யாரோடு வேண்டுமானாலும் படுக்கலாம். கூட்டு சேரலாம். கொலையும் செய்யலாம். அல்லது தீயாகச் சுடராக எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொண்டுஇ மூக்கைச் சிந்திக்கொண்டே ஒருநாள் உயிரை விடவேண்டும்!

முறைகேடான உறவுகள் ஒருபுறமிருக்க சினிமாவைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. வேடிக்கை இவை எல்லாமே குடும்ப சீரியல்கள் _ மர்ம சீரியல்கள் அல்ல. பாம் வைப்பது எப்படி என்பதை ரொம்ப நுணுக்கமாக அறிவியல்பூர்வமாக காட்டுகிறார்கள். ‘ஆசிட் முட்டையால் அடித்துவிட்டார்கள்’ என்று கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர ஆசிடை முட்டையில் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? _பிளேடு பக்கிரிகளைத் தவிர! சீரியல்களில் ரொம்ப நேர்த்தியாக அதைக் காட்டியதோடு அதை எதில் மறைத்து எடுத்துவரவேண்டும் என்கிற அளவுக்கு தெளிவாக தமிழ் பேசும் மக்களுக்குப் பாடம் எடுத்தார்கள். சீரியலில் தன் கணவர் உடனே பார்க்க வேண்டும் என்கிற வெறியில் சைக்கோதனமான நடிகை பாத்ரூமிற்கு சென்று பொறுமையாக பிளேடால் கையைக் கீறிக்கொள்கிறாள். நம் உடம்பு சிலிர்க்கிறது. ரத்தம் குபு குபுவென்று கொட்ட வாஷ்பேசின் முழுக்க ரத்தத் தண்ணீர்!

இப்படி தறிகெட்டு காட்டப்படும் வன்முறைக் காட்சிகளையும் முறைகேடான உறவுகளையும் பச்சையான வசனங்களையும் ஏதாவது ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த வேண்டாமா? இதற்கெல்லாம் சென்சார் என்று ஒன்று வேண்டாமா? இரண்டு பெண்டாட்டி கதைகளும் போரடிக்கும்பட்சத்தில் புதுமை என்கிற பெயரில் அடுத்த விபரீதம் என்ன நடக்கப் போகிறது? சமூக அக்கறையுள்ள எத்தனையோ பெற்றோர்கள் இப்படி நிறைய கேள்விகளுடன் கவலையோடு பார்க்கிறார்கள்.

அவர்கள் ஆதங்கம் நியாயமானது. ‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்ற தைரியம் கொடுக்கும் சீரியல்கள் பலரது குறிப்பாக பெண்களது மனதை நிச்சயமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சீரியல் பெண்களோடு வாழ ஆரம்பித்துவிட்டார்கள். 

நமது கலாசாரத்தில் ஊறிப்போன விருந்தோம்பலுக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் வேட்டு வைத்துவிட்டன. எத்தனையோ வருடங்களுக்குப்பிறகு வீட்டுக்கு வரும் விருந்தாளியும் சீரியல் நேரத்தில் வந்தால் அவர் வேண்டாத விருந்தாளியாக நெஞ்சு முழுக்க எரிச்சலுடன் வரவேற்கப்படுகிறார். அவ்வளவு ஏன் பல வீடுகளில் அலுவலகத்திலிருந்து தாமதமாக வரும் கணவன் மனைவியோடு மனம் விட்டு பேசிக்கொள்வதுகூட முடியாமல் போகிறது. பல தாய்மார்களுக்கு குழந்தைகள் படிப்பைக் கவனிப்பதுகூட இரண்டாம்பட்சமாகி விடுகிறது.

சீரியல் பிசாசுகளையும் அதனால் ஏற்பட்டுள்ள மதிமயக்கத்தைப் பற்றியும் சீரியஸாக ஆராய வேண்டிய நேரம் இது!

 இந்த விபரீதப் போக்கு சீக்கிரமாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்!

கருத்துகள் இல்லை: